ஐ.பி.எல்.: முன்னணி ஆல் ரவுண்டரை வாங்க அர்ஜுன் தெண்டுல்கரை டிரேடிங்கில் மாற்றும் மும்பை..?

image courtesy:PTI
மும்பை - லக்னோ அணிகள் இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான (டிரேடிங்) பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கரை கொடுத்து விட்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து முன்னணி ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூரை வாங்க மும்பை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அர்ஜுன் டெண்டுல்கர், 2023-ல் மும்பை அணிக்காக அறிமுகமானார். இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த மெகா ஏலத்தில் அவரை ரூ.30 லட்சம் அடிப்படை விலைக்கு மும்பை அணி மீண்டும் ஏலத்தில் எடுத்தது. தற்போது ஷர்துல் தாகூருக்காக அவரைப் பரிமாற்றம் செய்ய மும்பை அணி திட்டமிட்டுள்ளது.
கடந்த மெகா ஏலத்தின்போது விலை போகாத ஷர்துல் தாகூரை மாற்றுவீரராக லக்னோ அணி ஒப்பந்தம் செய்தது. அந்த வாய்ப்பில் ஒரளவு அசத்திய அவர் 10 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.






