ஐ.பி.எல்.: சென்னை அணியின் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்

image courtesy:PTI
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது.
சென்னை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்திற்கு மாறாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்றுள்ளது. இதனால் வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.
இதனால் எதிர்கால அணியை உருவாக்கும் முயற்சியில் சிஎஸ்கே நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி ஷேக் ரசீத், ஆயுஷ் மாத்ரே மற்றும் டிவால்ட் பிரெவிஸ் போன்ற இளம் வீரர்களை ஏற்கனவே அணியில் சேர்த்து வாய்ப்பு வழங்கியுள்ளது.
அந்த வரிசையில் ராஜஸ்தானை சேர்ந்த 19-வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவை சென்னை அணி பயிற்சி முகாமுக்கு அழைத்துள்ளது. அங்கு அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க சென்னை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் அணி சார்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் கார்த்திக் சர்மா ஏற்கனவே நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் 26 சிக்சர்களை விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






