விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை சிராஜ் இதை செய்யுங்கள் - இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

image courtesy:PTI
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சிராஜ் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது.
பென் டக்கெட்டின் அபார சதத்தால் (149 ரன், 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) 82 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பென் டக்கெட் தேர்வு செய்யப்பட்டார்.
2-வது இன்னிங்சில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் விக்கெட் எடுக்காதது பின்னடைவாக அமைந்தது. இந்த தொடரில் பும்ரா, முகமது சிராஜ் நீங்கலாக மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் அனுபவம் இல்லை. இவர்களில் பும்ரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஆனால் மறுபுறம் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அத்துடன் ஓவருக்கு சராசரியாக 4 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்தார். இது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் முகமது சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை ரன்களை வழங்க கூடாது என்று இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சிராஜிடம் என்னுடைய ஒரே கேள்வி என்னவெனில் உங்களால் ரன்கள் கொடுப்பதை குறைக்க முடியாதா? நீங்கள் விக்கெட்டுகளை கூட எடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் ஓவருக்கு 4 - 5 ரன்களை கொடுப்பதால் பும்ராவை மீண்டும் பவுலிங் செய்ய வைக்க வேண்டியுள்ளது. பும்ராவால் எத்தனை அணைகளைக் கட்ட முடியும்?அவரையும் எதிரணியினர் சமாளித்து களைப்படைய வைக்கிறார்கள்.
அதனால் நீங்கள் ஜடேஜாவிடம் செல்ல வேண்டியுள்ளது. பிரசித் கிருஷ்ணா முதல் முறையாக விளையாடுவதால் அனுபவமற்றவராக இருக்கிறார். எனவே சிராஜ் அணியில் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர வேண்டும். மோர்னே மோர்கல் 20 ஓவரில் 2/43 என்ற வகையில் பவுலிங் செய்தது உங்களுக்கு நினைவு இருக்கிறதா? அதே போலத்தான் சிராஜ் செய்ய வேண்டும்.
எனவே நீங்கள் 58 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தாலும் பரவாயில்லை. அவர் அதில் திறம்பட செயல்பட்டால், அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுப்பது முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் ஒருவரையொருவர் சார்ந்து பந்துவீச வேண்டும். இஷாந்த் சர்மா, மோர்னே மோர்கல் அதை அற்புதமாக செய்தவர்கள். நிச்சயமாக, நான் சிராஜிடம் அதையே செய்யச் சொல்லவில்லை. ஆனால் ரன்கள் கொடுப்பதை கட்டுப்படுத்துங்கள்" என்று கூறினார்.