ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று தொடக்கம்.. இந்தியா- பாக். ஆட்டம் எப்போது தெரியுமா..?

image courtesy:twitter/@ACCMedia1
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.
துபாய்,
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை இன்று எதிர்கொள்கிறது. 14-ந்தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடனும், 16-ந்தேதி மலேசியாவுடனும் மோதுகிறது.
இன்றைய தொடக்க நாளில் இந்திய அணி, யாயின் கிரண் ராய் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகத்தை (காலை 10.30 மணி) சந்திக்கிறது. இந்த ஆட்டம் துபாய் ஐ.சி.சி. அகாடமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- மலேசியா அணிகள் மோதுகின்றன.






