லார்ட்ஸ் டெஸ்ட்: தோல்வி குறித்து உருக்கமாக பேசிய முகமது சிராஜ்

லார்ட்சில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது.
முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற பரபரப்பான 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இந்தியாவை 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 112 ரன்களுடன் ஊசலாடியது. இதனால் இங்கிலாந்து எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். இதையடுத்து 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன், ஜஸ்பிரித் பும்ரா கூட்டு சேர்ந்தார். பும்ரா முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ஆடிய பும்ரா ஒரு மணி நேரத்திற்கு மேலாக இங்கிலாந்து பவுலர்களை சோதித்தார். இருவரும் ஓவருக்கு ஒரு ரன் அல்லது மெய்டன் என்ற ரீதியில் கணக்கு போட்டு ஆடினர். இதனால் இந்தியா கொஞ்சம் சரிவில் இருந்து மீள்வது போல் தெரிந்தது.
ஸ்கோர் 147-ஐ எட்டிய போது பும்ரா (5 ரன், 54 பந்து) ஸ்டோக்ஸ் வீசிய பந்தை தேவையில்லாமல் தூக்கியடித்து கேட்ச் ஆனார். ஆனாலும் ஜடேஜா களத்தில் நின்றதால் நம்பிக்கை குறையவில்லை. கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த முகமது சிராஜ் துணையுடன் ஜடேஜா தொடர்ந்து 4-வது அரைசதத்தை கடந்தார்.
இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் வீசிய பந்தை எதிர்கொண்ட சிராஜ் அதை தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு உருண்டு ஸ்டம்பை தட்டியது. சிராஜ் 4 ரன்னில் (30 பந்து) போல்டு ஆனார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிராஜ் சோகத்தில் மைதானத்தில் அப்படியே அமர்ந்து விட்டார்.
இந்நிலையில் 4 -வது போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முகமது சிராஜ், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து உருக்கத்துடன் பேசினார்.
இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு, "வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் நான் மிகவும் சோகமாக இருந்தேன். அந்த மாதிரியான போட்டியில், ஜட்டு பாயுடன் (ஜடேஜா) எனக்கு நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தது. நான் பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்தால் இங்கே அவுட் ஆக முடியாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒருவேளை நான் அவுட்டானால் அது என்னுடைய தவறால் நடந்ததாக மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொண்டு விளையாடினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் அவுட் ஆனேன். அது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த போட்டியில் நாங்கள் வென்றிருந்தால், முடிவு முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும்" என்று கூறினார்.






