சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம்: மெக் லானிங்கை சமன் செய்தார் மந்தனா


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம்: மெக் லானிங்கை சமன் செய்தார் மந்தனா
x

6-வது லீக்கில் ஆடிய இந்திய அணி 3-வது வெற்றியை சுவைத்து, கடைசி அணியாக அரைஇறுதியை எட்டியது.

மும்பை,

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி நியூசிலாந்தை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக முதலில் பேட் செய்த இந்திய அணி 49 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 340 ரன்கள் குவித்தது. பெண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் மெகா ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 330 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

பின்னர் சிறிது நேரம் மழை பெய்ததால் ஆட்டம் 44 ஓவராக குறைக்கப்பட்டு, நியூசிலாந்து அணி டக்வொர்த்- லீவிஸ் விதிப்படி 325 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய நியூசிலாந்து 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. பின்வரிசையில் அமெலியா கெர் (45 ரன்), புரூக் ஹேலிடே (81 ரன்), இசபெல்லா கேஸ் ( 65 ரன்) ஆகியோரின் போராட்டம் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. நிர்ணயிக்கப்பட்ட 44 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 271 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது தோல்வியை தழுவிய நியூசிலாந்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

6-வது லீக்கில் ஆடிய இந்திய அணி 3-வது வெற்றியை சுவைத்து, கடைசி அணியாக அரைஇறுதியை எட்டியது. உலகக் கோப்பையில் இந்திய அணி அரைஇறுதிக்கு வருவது இது 5-வது முறையாகும். இந்திய அணி அனேகமாக அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா அதிக சதம்

• 109 ரன்கள் நொறுக்கிய இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவுக்கு இது 14-வது சதமாகும். இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக்லானிங் (15 சதம்) உள்ளார். 3-வது இடத்தில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (13 சதம்) இருக்கிறார்.

• ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி சேர்த்து) மந்தனாவின் 17-வது சதம் இதுவாகும். இந்த வகையில் அதிக சதங்கள் அடித்தவரான மெக் லானிங்குடன் முதலிடத்தை (இவரும் 17 சதம்) பகிர்ந்துள்ளார்.

• பெண்கள் உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் காண்பது இது 3-வது நிகழ்வாகும்.

• இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் 15 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் ஆயிரம் ரன்களை (23 இன்னிங்ஸ்) எட்டியதுடன், இந்த மைல்கல்லை அதிவேகமாக கடந்த ஆஸ்திரேலியாவின் லின்ட்சே ரீலரின் சாதனையை சமன் செய்தார். லின்ட்சே 1988-ம் ஆண்டில் இச்சாதனையை செய்திருந்தார்.

• மந்தனாவும், பிரதிகாவும் கூட்டாக 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 4-வது முறையாகும். அத்துடன் அதிக தடவை 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க்- கெய்ட்லி, நியூசிலாந்தின் சுசி பேட்ஸ்- சட்டர்த்வெயிட் ஆகிய ஜோடிகளின் சாதனையை சமன் செய்திருக்கிறார்கள்.

1 More update

Next Story