மந்தனா, ஹர்மன்ப்ரீத் ஆகியோர் எனக்கு ஆதரவு கொடுத்தனர் - ஷபாலி வர்மா

image courtesy: @BCCIWomen
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.
மும்பை,
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டி தூக்கியது.
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் (2005 மற்றும் 2017) தோற்றிருந்த இந்திய அணி இந்த முறை அந்த ஏக்கத்தை தணித்து ரசிகர்களுக்கு தித்திப்பான பரிசை அளித்துள்ளது.
மகுடம் சூடிய இந்திய அணிக்கு ரூ.39½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த தென்ஆப்பிரிக்காவுக்கு 19¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இங்கே வந்து ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே கடவுள் என்னை இங்கு அனுப்பினார் என்று நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன். அது இன்று பிரதிபலித்தது. நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது கடினமானது என்பதால் என்றாலும் என் மேலே தன்னம்பிக்கை இருந்தது.
இருப்பினும் அமைதியுடன் இருந்தால் என்னால் எதுவும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என்னுடைய பெற்றோர்கள், நண்பர்கள் சகோதரர் உட்பட அனைவரும் எனக்கு ஆதரவளித்து எப்படி விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள உதவினர். அது எனக்கும் எங்கள் அணிக்கும் முக்கியம். நான் என்னுடைய அணியை வெற்றி பெற வைக்க விரும்புகிறேன். என்னுடைய மனது தெளிவாக இருந்ததால் எனது திட்டங்களில் வேலை செய்தேன்.
அதை செயல்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி. மந்தனா, ஹர்மன்ப்ரீத் ஆகியோர் எனக்கு ஆதரவு கொடுத்தனர். என்னுடைய சொந்த ஆட்டத்தை விளையாடுமாறு சீனியர்கள் சொன்னார்கள். அது போன்ற தெளிவு தான் உங்களுக்குத் தேவை. சச்சின் டெண்டுல்கர் சாரை பால்கனியில் பார்த்தது எனக்குப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. அவரிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர் எனக்கு தொடர்ந்து தன்னம்பிக்கையைக் கொடுத்தார். கிரிக்கெட்டின் மாஸ்டரான அவரைப் பார்த்து நாங்கள் ஊக்கத்தைப் பெறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






