கில் இல்லை.. இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக முன்னணி வீரரை நியமிக்க பி.சி.சி.ஐ. திட்டம்

தற்போதைய இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு புதிய கேப்டனை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஏனெனில் தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த சூழலில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். இருப்பினும் ஒருநாள் உலகக்கோப்பை வரை அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.
அத்துடன் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் அவர் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு சுப்மன் கில் முன்னணி வாய்ப்பில் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியான தகவலின் படி, இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னரோ அல்லது பின்னரோ வரும் என கூறப்படுகிறது.






