தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கெய்க்வாட் அணியில் இடம்பெறுவாரா..? கேப்டன் கே.எல். ராகுல் பதில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கெய்க்வாட் அணியில் இடம்பெறுவாரா..? கேப்டன் கே.எல். ராகுல் பதில்
Published on

ராஞ்சி,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அவர் உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை. இது பல சமயங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் கிடைக்குமா? என்று கேப்டன் கே.எல். ராகுலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ருதுராஜ் கெய்க்வாட் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர். தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் முதல் 6 அல்லது முதல் 5 பேர் சிறப்பாக செயல்படுவதால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். இப்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கி, அவரால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு வீரராக அவர் எவ்வளவு நல்லவர் என்பது குறித்து ஒருபோதும் கேள்வி இல்லை என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com