இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுத் தர வேண்டும் என்பதே எங்களது நோக்கம் - இந்திய வீராங்கனை

Image Courtesy: @BCCIWomen
ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவால்கள் நிறைந்திருக்கும் எனவும், எங்களது இலக்கு இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே எனவும் இந்திய வீராங்கனை ஸ்நே ராணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது, சொந்த மண்ணில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் இருக்கப் போகிறது. சொந்த மண்ணில் விளையாடவுள்ளது சிறப்பான உணர்வைத் தருகிறது. நீண்ட ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வரும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் விளையாடவுள்ளது மேலும் சிறப்பான விஷயம்.
இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுத் தர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மகளிர் பிரீமியர் லீக் வீராங்கனைகளுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுடன் இணைந்து மற்றும் அவர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பினை மகளிர் பிரீமியர் லீக் ஏற்படுத்திக் கொடுத்தது.
வெளிநாட்டு வீராங்கனைகள் எவ்வாறு விளையாடுகிறார்கள், எவ்வாறு திட்டம் வகுக்கிறார்கள், முக்கியமான தருணங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக் கொள்ள மகளிர் பிரீமியர் லீக் உதவியது. இவ்வாறு அவர் கூறினார்.






