இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் பேட்டிங் செய்த விதம் இந்தியாவுக்கு.. - பார்தீவ் படேல் பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா 516 ரன்கள் குவித்து அசத்தினார்.
மும்பை,
இந்தியா-இங்கிலாந்து இடையே 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இம்முறை பந்துவீச்சை விட பேட்டிங்கில் ஜொலித்தார். மொத்தம் 516 ரன்கள் குவித்த அவர் இந்த தொடரில் அதிக ரன் அடித்த 4-வது வீரராக சாதனை படைத்தார்.
இந்நிலையில் இந்த தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை இந்திய முன்னாள் வீரர் பார்தீவ் படேல் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டு முறை பேட்டிங் சரிவை சந்தித்ததால் ஜடேஜா அடித்த 516 ரன்களின் மதிப்பு கணிசமாக அதிகரிக்கிறது. அந்த சமயங்களில்தான் 6வது மற்றும் 7வது வரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. மேலும் அந்த இடத்தை ரவீந்திர ஜடேஜா ஆக்கிரமித்துள்ளதால் அவரது பெயர் இயல்பாகவே வருகிறது. அதன் பிறகு, தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஒரு பேட்டிங் சரிவு கூட ஏற்படவில்லை. அவர் பேட்டிங் செய்த விதமும் அவர் காட்டிய நிலைத்தன்மையும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது” என்று கூறினார்.






