இந்திய பயிற்சியாளர் குறித்த கேள்வி.. கபில் தேவ் அளித்த பதில் என்ன..?

கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது.
மும்பை,
சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனதால் பலரும் தலைமை பயிற்சியாளர் ஆன கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்தனர். கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல் முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இதனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனத்துக்குள்ளானார். அவரை நீக்க வேண்டும். பரீட்சார்த்த முயற்சி என்ற பெயரில் அணியை சீரழித்துக் கொண்டிருக்கிறார் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்களது குமுறலை கொட்டி தீர்த்தனர்.
கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மோசமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வந்தாலும் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது.
இதனால் இந்திய டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து போட்டிக்கு தனித்தனி பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு தெரியாது. அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.






