ராஜஸ்தான் ராயல்ஸ்தான் எனக்கு உலகமே - சஞ்சு சாம்சன்

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் ராஜஸ்தான் அணியிலிருந்து சாம்சன் வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

சென்னை,

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. அதில் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து விலக முடிவெடுத்ததாக கூறப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார். முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் அடுத்த சீசனுக்கான (2026) மினி ஏலத்திற்கு முன்பு தன்னை டிரேடிங் முறையில் மாற்றவோ அல்லது அணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சனின் குடும்ப உறுப்பினர்கள், அவர் இனி ராயல்ஸ் அணியில் தொடர விரும்பவில்லை என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.

ராஜஸ்தான் அணிக்காக 11 சீசன்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 4,219 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக உள்ளார். சஞ்சு சாம்சனின் வளர்ச்சியில் ராஜஸ்தான் அணியின் பங்கு அளப்பரியது. ஆரம்ப காலங்களில் அவரை நம்பி தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்தது. அந்த வாய்ப்பில் அசத்திய அவர் தற்போது இந்திய அணியிலும் விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட சூழலில் அவர் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறப்போவதாக எடுத்துள்ள முடிவு பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் குறித்து மனம் திறந்து சில கருத்துகளை கூறியுள்ளார்.

அதில், ராஜஸ்தான் ராயல்ஸ்தான் எனக்கு உலகமே. கேரளாவின் ஒரு கிராமத்திலிருந்து வந்த ஒரு சிறு குழந்தை, தனது திறமையைக் காண்பிக்க விரும்பியது. அந்த சமயத்தில் ராகுல் (டிராவிட்) சார் மற்றும் மனோஜ் படேல் சார், நான் எப்படிப்பட்டவன் என்பதை உலகுக்குக் காட்ட ஒரு மேடையைக் கொடுத்தார்கள். அந்த நேரத்தில், அவர்கள் என்னை முழுவதுமாக நம்பினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுபோன்ற ஒரு அணியில் இருந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அங்கே விளையாடியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com