இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிரடி கட்டுப்பாடு

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
புதுடெல்லி,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் ஒரு தொடரின் 5-வது போட்டியில் இந்தியா வெற்றி காண்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
இந்த நிலையில் , இந்திய முன்னணி வீரர்கள் அவர்களே குறிப்பிட்ட சில போட்டிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆடுவதற்கு இனி இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்காது என்பது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இரு ஜாம்பவான்கள் அடுத்தடுத்து விலகிய நிலையிலும், சுப்மன் கில் தலைமையிலான இளம் படை சாதித்து காட்டியிருக்கிறது.
பெரிய வீரர்கள் இல்லாததால் இப்போது இந்திய கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கரின் ஆதிக்கம் முழுமையாக தொடங்கி விட்டது. சமீபத்திய ஆண்டுகளில் சில மூத்த வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளில், சில தொடர்களில் ஆடாமல் அவர்களே முன்வந்து ஓய்வு எடுத்துக் கொண்ட நிகழ்வுகள் நடந்தன. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை காரணம் காட்டி மூன்று டெஸ்டில் மட்டுமே விளையாடினார். இரு டெஸ்டில் ஒதுங்கிக் கொண்டார்.
ஆனால் பயிற்சியாளர் கம்பீரை பொறுத்தவரை, அணியில் சூப்பர் ஸ்டார் வீரர் கலாசாரத்துக்கு எதிரானவர். அதாவது எப்படிப்பட்ட நட்சத்திர வீரராக இருந்தாலும் சரி முதலில் அணியின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனிநபரின் விருப்பம் எல்லாம் 2-வது பட்சம் தான் என்பதில் உறுதியாக இருப்பவர். முன்னணி வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் தேர்ந்தெடுத்து விளையாடும் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் கம்பீரும், அகர்கரும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வருவதில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்த சிக்கலும் இருக்காது.
'இது தொடர்பாக இந்திய அணியின் நிர்வாக கூட்டத்தில் அவ்வப்போது விவாதிக்கப்படுகிறது. ஒப்பந்த வீரர்கள் குறிப்பாக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் அவர்கள் ஆடும் போட்டிகளை அவர்களே தேர்வு செய்வதற்கு இனி வரும் காலங்களில் அனுமதிக்கப்படாது என்ற செய்தி வீரர்களை சென்றடையும்' என பெயர் வெளியிட விரும்பாத மூத்த கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அதற்காக வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதை புறந்தள்ளிவிட்டதாக அர்த்தம் கிடையாது. வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றால் தளர்ந்து விடுவார்கள் அல்லது காயம் அடைய வாய்ப்பு உண்டு. அதனால் அவர்களுக்கு ஓய்வு அவசியம் தான். ஆனால் பணிச்சுமை என்று கூறி மிக முக்கிய போட்டிகளை தவற விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.






