சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் கண்டிப்பாக மீண்டும்.. - இந்திய துணை பயிற்சியாளர் நம்பிக்கை

image courtesy: PTI
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சுப்மன் கில் கோல்டன் டக் ஆகினார்.
மும்பை,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி நியூசண்டிகாரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 90 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 214 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் திலக் வர்மா 62 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்கா தரப்பில் பார்த்மேன் 4 விக்கெட் கைப்பற்றினார். டி காக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் (5 ரன்) மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில்லின் (கோல்டன் டக்) மோசமான பேட்டிங் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருவரும் அரைசதம் அடித்து ஏறக்குறைய ஒரு வருட காலம் ஆகி விட்டது.
இதில் இந்திய கேப்டன் சூர்யகுமார் கடைசி 20 இன்னிங்சில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மறுபுறம் சுப்மன் கில்லும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இதன் காரணமாக சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவரும் கண்டிப்பாக மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள் என்று இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு சுப்மன் கில்லின் பேட்டிங்கில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நிச்சயம் அவர் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏமாற்றி இருந்தாலும் இனி நன்றாக விளையாடுவார்.
முதல் ஆட்டத்தில் நாங்கள்தான் அவரை அதிரடியாக ஆட சொன்னோம். கட்டாக்கில் ஒரு சிறந்த விக்கெட் அல்ல. எனவே நான் அவரை அந்த ஆட்டத்தில் விட்டுவிடுவேன். இந்த 2-வது ஆட்டத்தில் அவர் ஒரு நல்ல பந்தில் விக்கெட்டை இழந்தார். நீங்கள் பார்மில் இல்லாதபோது இவ்வாறு நிகழலாம் . எங்களுக்கும் அவரின் தரம் தெரியும். ஐ.பி.எல். தொடரில் அவரது சாதனைகளை பார்த்தால் அது தெரியும். அவர் நன்றாக மீண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
சூர்யாவுக்கும் இதேதான். தரமான வீரர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு தேவையான நேரத்தை கொடுத்தால் நிச்சயம் அவர்கள் பார்முக்கு திரும்புவார்கள். இதையெல்லாம் புரிந்துகொண்டு வெளியில் இருந்து நீங்களும் ஆதரவு தரவேண்டும். அணியின் நிர்வாகம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது போல வெளியில் இருந்து நம்பிக்கை கிடைத்தால் நிச்சயம் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். அவர்கள் இருவரும் சரியான நேரத்தில் நல்லபடியாக வருவார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது” என கூறினார்.






