ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்து சூர்யகுமார் யாதவ் அப்டேட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின்போது காயமடைந்த ஸ்ரேயாஸ் சிட்னி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்து சூர்யகுமார் யாதவ் அப்டேட்
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை.

அவர் இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சில ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடலின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள இந்திய அணியின் மருத்துவர் அங்கேயே தங்கியிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், வேகமாக குணமடைந்து வருவதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளளார்.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்து இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில தகவல்களை அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ஸ்ரேயாஸ் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நல்ல முறையில் நலம் பெற்று வருகிறார். சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் ஆனால் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக நான் அவருடன் பேசி வருகிறேன், அவர் தொலைபேசியில் பதிலளித்து வருகிறார். அவர் பதில் அளித்தால், அவர் நிலையாக இருக்கிறார் என்று அர்த்தம் என கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com