32 பந்துகளில் சதம் விளாசி சூர்யவன்ஷி அசத்தல்..இந்திய ‘ஏ’ அணி மெகா வெற்றி


32 பந்துகளில் சதம் விளாசி சூர்யவன்ஷி அசத்தல்..இந்திய ‘ஏ’ அணி  மெகா வெற்றி
x
தினத்தந்தி 15 Nov 2025 7:30 AM IST (Updated: 15 Nov 2025 7:30 AM IST)
t-max-icont-min-icon

டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தோகா,

வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது. 23-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ‘ஏ’ அணி, ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய ‘ஏ’ அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய 14 வயது வைபவ் சூர்யவன்ஷி வழக்கம் போல அதிரடியாக மட்டையை சுழட்டினார். பந்தை நாலாபுறமும் தெறிக்கவிட்ட அவர் 32 பந்துகளில் சதத்தை கடந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்டுடன் இணைந்து பெற்றார். அத்துடன் உலக அரங்கில் இந்த சாதனை பட்டியலில் 5-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மிரட்டலாக ஆடிய சூர்யவன்ஷி 144 ரன்னில் (42 பந்து, 11 பவுண்டரி, 15 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் இந்திய ‘ஏ’ அணி 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 83 ரன்கள் (32 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய ‘ஏ’ அணி 148 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது . இந்திய தரப்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை சந்திக்கிறது.

1 More update

Next Story