டி20 உலகக்கோப்பை 2026: இந்த மாதங்களில் நடத்த ஐ.சி.சி. திட்டம்.. வெளியான தகவல்

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளன.
துபாய்,
10-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றிருப்பதும் அடங்கும். முந்தைய உலகக் கோப்பை போன்றே அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றை எட்டும். போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.






