1990-ம் ஆண்டுக்குப்பின்... மான்செஸ்டரில் சாதனை படைத்த சுப்மன் கில்

image courtesy:BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதமடித்தார்.
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன.
பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 228 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் 1990-ம் ஆண்டுக்குப்பின் மான்செஸ்டரில் சதமடித்த இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1990-ம் ஆண்டு சச்சின் தெண்டுல்கர் 4-வது இன்னிங்சில் (இலக்கை நோக்கி ஆடும் இன்னிங்ஸ்) 119 ரன்கள் விளாசி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றினார். இதுதான் தெண்டுல்கரின் 'கன்னி' சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வாஷிங்டன் சுந்தர் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி இந்திய அணியை முன்னிலை பெற வைத்தனர். இதனால் இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்கிறது.






