டெஸ்ட் கிரிக்கெட்: முதல் வீரராக வித்தியாசமான சாதனை படைத்த ஹாரி புரூக்

image courtesy:PTI
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக் இந்த சாதனையை படைத்தார்.
லீட்ஸ்,
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் (137 ரன்கள்), ரிஷப் பண்ட் (118 ரன்கள்) ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராலி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஜாக் கிராலி ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் டக்கெட் வேகமாக ரன் குவித்தார்.
இவர்களில் அதிரடியாக ஆடிய பென் டக்கெட் சதமும், ஜாக் கிராலி அரைசதமும் அடித்து அசத்தினர். கிராலி 65 ரன்களில் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆலி போப் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோ ரூட் - பென் டக்கெட் ஜோடி சேர்ந்து விளையாடினர். இதில் பென் டக்கெட் 149 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹாரி புரூக் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இருவரின் விக்கெட்டையும் ஷர்துல் தாகூர் தொடர்ச்சியாக வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 99 ரன்கள் அடித்த ஹாரி புரூக் 2-வது இன்னிங்சில் சந்தித்த முதல் பந்திலேயே 'கோல்டன் டக்' ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் 99 ரன்கள் மற்றும் 2-வது இன்னிங்சில் கோல்டன் டக் ஆகிய முதல் வீரர் என்ற வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.
தற்போது பென் ஸ்டோக்ஸ் - ஜோ ரூட் கூட்டணி விளையாடி வருகிறது.






