டெஸ்ட் கிரிக்கெட்: 3-வது வீரராக அரிய சாதனை நிகழ்த்திய ஜடேஜா

image courtesy:twitter/@BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஜடேஜா இந்த சாதனையை படைத்தார்.
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன.
பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 228 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வாஷிங்டன் சுந்தர் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் டிரா செய்யும் நோக்கில் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து வருகின்றனர். இதனால் ஆட்டம் மந்தமாக நடந்து வருகிறது. இவர்களின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து பவுலர்கள் முழு முயற்சியுடன் போராடி வருகின்றனர்.
தற்போது வரை இந்திய அணி 108 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 39 ரன்களுடனும், சுந்தர் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 21 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இந்த ஆட்டத்தில் ஜடேஜா 26 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்தார். அத்துடன் இங்கிலாந்தில் அவர் ஏற்கனவே 34 டெஸ்ட் விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் ஆயிரம் ரன்கள் மற்றும் 30 விக்கெட்டுகள் எடுத்த 3-வது வீரர் என்ற அரிய சாதனையை ஜடேஜா நிகழ்த்தியுள்ளார்.
அந்த பட்டியல்:
1. கேரி சோபர்ஸ் - 1,820 ரன்கள் & 62 விக்கெட்டுகள் - இங்கிலாந்து
2. வில்பிரட் ரோட்ஸ் - 1,032 ரன்கள் & 42 விக்கெட்டுகள் - ஆஸ்திரேலியா
3. ஜடேஜா - 1,014 ரன்கள் & 34 விக்கெட்டுகள்*






