டெஸ்ட் கிரிக்கெட்: வரலாறு படைத்த சுப்மன் கில்


டெஸ்ட் கிரிக்கெட்: வரலாறு படைத்த சுப்மன் கில்
x

image courtesy:BCCI

தினத்தந்தி 5 July 2025 8:20 PM IST (Updated: 5 July 2025 8:21 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சுப்மன் கில் இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

பர்மிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கருண் நாயர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த கே.எல்.ராகுல் 55 ரன்களில் அவுட்டானார். இதன் பின்னர் கைகோர்த்த ரிஷப் பண்ட் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதில் ரிஷப் பண்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய பண்ட் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறிது நேரத்திலேயே பண்ட் 65 ரன்களில் (58 பந்துகள்) அவுட்டானார். அடுத்து சுப்மன் கில்லுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக ஆடி அணிக்கு வலு சேர்த்தனர். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்து அசத்திய சுப்மன் கில் இந்த இன்னிங்சில் சதமடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் இதுவரை 369 ரன்கள் அடித்துள்ள சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சுப்மன் கில் - 369* ரன்கள்

2. சுனில் கவாஸ்கர் - 344 ரன்கள்

3. விவிஎஸ் லக்ஷ்மன் - 340 ரன்கள்

4. சவுரவ் கங்குலி - 330 ரன்கள்

5. வீரேந்திர சேவாக் - 319 ரன்கள்

தற்போது வரை இந்திய அணி 68 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்திய 484 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story