இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் கூடுதல் வீரர் சேர்ப்பு..?

imag courtesy:PTI
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி 20-ம் தேதி தொடங்க உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்தியா - இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடர் 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா கூடுதல் வீரராக சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்று கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சென்ற இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷித் ராணா மீண்டும் தாயகம் திரும்பாமல் இந்திய சீனியர் அணியுடன் இருக்குமாறு பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






