விராட் கோலியை அவுட்டாக்க எங்களது பஸ் டிரைவர் திட்டம் கொடுத்தார் - ஹிமான்ஷு சங்வான்

image courtesy:instagram/himanshusangwan69
ரஞ்சி கோப்பையில் விளையாடிய விராட் கோலியின் விக்கெட்டை ஹிமான்ஷு சங்வான் கைப்பற்றினார்.
புதுடெல்லி,
இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.
இதில் குறிப்பாக விராட் கோலி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்து வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்துள்ளார்.
இதனையடுத்து உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. அதன் காரணமாக 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் முடிவை எடுத்த விராட் கோலி டெல்லி அணிக்காக களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்த அவர் மீண்டும் சொதப்பினார். ரெயில்வே அணியின் ஹிமான்ஷு சங்வான் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
இந்நிலையில் அவுட்டாக்கிய பந்திலேயே விராட் கோலி கையெழுத்திட்டு தமக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்ததாக ஹிமான்ஷு தெரிவித்துள்ளார். மேலும் 5வது ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்கலாம் என்று தங்களுடைய அணியின் பஸ் டிரைவர் திட்டம் கொடுத்ததாகவும் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியிடம் பந்தை கையெழுத்திடுமாறு கொடுத்தபோது இதில்தான் என்னை அவுட்டாக்கினீர்களா? அது மிகவும் நல்ல பந்து. நீங்கள் நல்ல பவுலர். தொடர்ந்து கடினமாக உழையுங்கள். உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார். அது என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமான விக்கெட். ஏனெனில் விராட் கோலி நம்முடைய மொத்த நாட்டின் உத்வேகமாக இருக்கிறார்.
என் வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்ததைப் பார்த்தேன். எனவே அது எங்கள் அணிக்கு ஸ்பெஷலான விஷயம். அந்தப் போட்டிக்கு முன்பாக ரிஷப் பண்ட், விராட் கோலி விளையாட உள்ளதாக பேச்சுக்கள் காணப்பட்டன. அப்போது போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. பின்னர் பண்ட் விளையாட மாட்டார் என்றும் கோலி விளையாடுவார் நேரலை ஒளிபரப்பும் உள்ளது என்பதையும் நாங்கள் தெரிந்து கொண்டோம்.
அப்போது ரயில்வேஸ் அணியின் முன்னணி பவுலரான என்னால் அவருடைய விக்கெட்டை எடுக்க முடியும் என்று எங்கள் அணி வீரர்கள் சொன்னார்கள். பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அதனுடைய டிரைவர் கூட நீங்கள் 4 - 5 ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலி அவுட்டாகி விடுவார் என்று சொன்னார். அதனால் எனக்குத் தன்னம்பிக்கை கிடைத்தது. மற்றவரின் பலவீனத்தை பார்க்காமல் என்னுடைய பலத்தில் நான் கவனம் செலுத்தினேன். அதன் பயனாக விக்கெட் கிடைத்தது" என்று கூறினார்.