ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்க இது மட்டும்தான் காரணம் - ஆஸி.முன்னாள் வீரர்

image courtesy:PTI
இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார்.
பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக சுப்மன் கில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக களம் காணுகிறது.
புதிய ஒருநாள் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு களம் திரும்புகின்றனர். ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டி வரை தொடர்ந்து ஆட முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அவர்கள் அதுவரை தாக்குப்பிடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இருவரும் இந்த தொடரில் எப்படி செயல்பட போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
இந்நிலையில் வயது காரணமாக மட்டுமே கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ரோகித் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை வெளியிலிருந்து பார்க்கும்போது சுவாரஸ்யமான நகர்வாக இருந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் அத்தகைய சிறப்பான வெற்றிக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே அவருடைய வயதுதான் என்று நினைக்கிறேன். 38 வயதான அவரை நீக்கிவிட்டு இளம் வீரரான சுப்மன் கில்லை கேப்டனாக கொண்டு வந்துள்ளார்கள்” என்று கூறினார்.






