தோனியிடம் உள்ள அதே திறமை திலக் வர்மாவிடமும் உள்ளது - இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் திலக் வர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மும்பை,
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை பெற்றது. இதில் 166 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது. அரைசதம் அடித்து களத்தில் நின்ற திலக் வர்மா கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து இலக்கை எட்ட வைத்தார். இந்த ஆட்டத்தில் 72 ரன்கள் விளாசிய அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் தடுமாறிய வேளையில் திலக் வர்மா மட்டும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் திலக் வர்மாவை முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "திலக் வர்மாவிடம் பதற்றமும், பயமும் எதுவுமே தெரியவில்லை. 19-வது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத நிலையிலும் எந்த அழுத்தத்தையும் வெளியில் காட்டாமல் மகிழ்ச்சியுடன் இருந்தார். பின்னர் 20-வது ஓவரின்போது சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக போட்டியை முடித்துக் கொடுத்தார்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்று அழுத்தமான போட்டிகளை வெகு இயல்பாக கொண்டு சென்று வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் தன்னம்பிக்கையுடன் விளையாடியவர். அவரை போன்ற ஒரு தன்னம்பிக்கை திலக் வர்மாவிடம் இருக்கிறது. அவரது மன உறுதி என்னை பிரமிக்க வைத்துள்ளது. இனிவரும் போட்டிகளில் திலக் வர்மா இன்னும் மிகச்சிறப்பாக செயல்பட்டு பினிஷிங் செய்வார்" என்று கூறினார்.






