டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ்

image courtesy: @TNPremierLeague
சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ராஜகோபால் 60 ரன்கள் எடுத்தார்.
கோவை,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் ஆடின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. மதுரை தரப்பில் அதிகபட்சமாக அதீக் உர் ரஹ்மான் 38 ரன் எடுத்தார்.
சேலம் தரப்பில் எம் முகமது 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களம் கண்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் மற்றும் ஹரி நிஷாந்த் களம் கண்டனர். இதில் அபிஷேக் 8 ரன்னிலும், ஹரி நிஷாந்த் 6 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து நிதிஷ் ராஜகோபால் மற்றும் கவின் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ராஜகோபால் அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்னிலும், அடுத்து களம் கண்ட ராஜேந்திரன் விவேக் 17 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து கவினுடன் சன்னி சந்து ஜோடி சேர்ந்தார்.
இறுதியில் சேலம் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ராஜகோபால் 60 ரன்கள் எடுத்தார். மதுரை தரப்பில் குர்ஜப்னீத் சிங், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






