23 வயதுக்குட்பட்டோர் மாநில கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்

தமிழக அணி இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசத்தை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று சந்தித்தது.
மும்பை,
23 வயதுக்குட்பட்டோருக்கான மாநில ‘ஏ’ கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. இதில் பங்கேற்ற 31 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்த தமிழக அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் முதலிடத்தை பிடித்து ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. கால்இறுதியில் ஆந்திராவையும், அரைஇறுதியில் பெங்காலையும் வீழ்த்திய தமிழக அணி இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசத்தை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று சந்தித்தது.
இதில் முதலில் பேட் செய்த பூபதி வைஷ்ணகுமார் தலைமையிலான தமிழக அணி 49.3 ஓவர்களில் 297 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிஷ் (53 ரன்), முகமது அலி (57 ரன்), மனவ் பராக் (57 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் 298 ரன் இலக்கை நோக்கி ஆடிய உத்தரபிரதேச அணி 47.5 ஓவர்களில் 241 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக பிரசாந்த் வீர் 87 ரன்கள் எடுத்தார். முகமது அலி 5 விக்கெட் சாய்த்தார்.
இதன் மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.






