நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி..இந்திய அணி சாதனை

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
மும்பை,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாண்ட்னர் அதிகபட்சமாக 47 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 44 ரன்கள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம் டி20 போட்டியில் விரட்டிப்பிடித்த தங்களது முந்தைய அதிகபட்ச இலக்கு சாதனையை (சேசிங்) இந்திய அணி சமன் செய்தது.ஏற்கனவே 2023-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியா 209 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்திருந்தது.






