விஜய் ஹசாரே கோப்பை: கோவா அணியை வீழ்த்தி மும்பை வெற்றி

87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - கோவா அணிகள் மோதின.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணியில் சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் சதமடித்து அசத்தினார்.அவர் 75 பந்துகளில் 14 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 157 ரன்களை குவித்தார்.
இறுதியில், மும்பை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 444 ரன்களைக் குவித்தது.
445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.






