விராட்கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.200 கோடி வரை இழப்பு

ட்ரீம் 11 நிறுவனம் தனது தளத்தில் பணம் செலுத்தி விளையாடும் போட்டிகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.
புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே பிரபல ஆன்லைன் கேமிங் தளமான ட்ரீம் 11 நிறுவனம் தனது தளத்தில் பணம் செலுத்தி விளையாடும் போட்டிகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. அதோடு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை ஸ்பான்சராக இருந்த அந்த நிறுவனம் விலகியது. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) உறுதி செய்தது.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குமுறை மசோதாவால் வீராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.150 முதல் ரூ.200 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா, பும்ரா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, குருநால் பாண்ட்யா ஆகியோர் ட்ரீம் 11 நிறுவன ஒப்பந்தத்திலும், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முகமது சிராஜ், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் மை 11 நிறுவன ஒப்பந்தத்திலும் உள்ளனர். வீராட் கோலி எம்.பி.எல். நிறுவனத்திலும், தோனி வின்சோ நிறுவனத்திலும் விளம்பர தூதராக இருக்கிறார்.
இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதன் மூலம் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.150 முதல் ரூ.200 கோடி வரை வருமான இழப்பு ஏற்படலாம். அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான விளம்பர வருவாய் கிடைப்பதில்லை. வீராட் கோலியின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடியாகும். ரோகித் சர்மா, தோனி ஆகியோர் ரூ.6 முதல் 7 கோடி வரை ஒப்பந்தமாகியுள்ளனர். மற்ற வீரர்களும் ரூ.1 கோடிக்கு மேல் ஒப்பந்தமாகியுள்ளனர்.






