விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஜாம்பவான்கள் - கம்பீர் புகழாரம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது .
புதுடெல்லி,
இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.
ரோகித் சர்மா, விராட் கோலியின் சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் கடுமையான விமர்சனங்களை அவர்கள் சந்தித்துள்ளனர் .
இந்த நிலையில், விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது
விராட் கோலியும், ரோகித் சர்மாவும் கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். அவர்கள் தங்களது திறமையை யாருக்காகவும் நிரூபித்து காட்ட வேண்டிய தேவையில்லை. தங்களது மகத்தான பேட்டிங்கால் ரசிகர்களை குதூகலப்படுத்தக்கூடியவர்கள். இன்னும் சில ஆண்டுகள் அவர்கள் விளையாடுவார்கள். ஒரு நாள் கிரிக்கெட்டில் 'சேசிங்' செய்வதில் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி என்பதை மறந்து விட வேண்டாம். அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகளில் அவர்கள் அசத்துவார்கள் என்று நம்புகிறேன். என்றும் குறிப்பிட்டார்.