இந்திய அணியின் நீண்ட கால ஆல்-ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவெடுப்பார் - முன்னாள் பயிற்சியாளர்

image courtesy:BCCI
வாஷிங்டன் சுந்தர் இதுவரை 11 டெஸ்டுகளில் ஆடி 30 விக்கெட்டும், 4 அரைசதம் உள்பட 545 ரன்களும் எடுத்துள்ளார்.
மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, நான் எப்போதும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பதை விரும்புவேன். ஏனெனில் அவரை பார்த்த முதல் நாளின் போதே, அவர் இந்திய அணிக்கு முழுமையான ஆல்-ரவுண்டராக பல ஆண்டுகளுக்கு இருப்பார் என கூறினேன். அவருக்கு தற்போது 25 வயதாகிறது.
அவர் நிறைய டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் சுழலுக்கு உகந்த ஆடுகளங்களில் அவர் மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளராக இருப்பார். கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதே அது தெரிந்திருக்கும்.
அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும். அவர் இயல்பாகவே திறமையான பேட்ஸ்மேன் ஆவார். அவர் 8-வது வரிசையில் ஆடக்கூடிய வீரர் அல்ல. விரைவில் அவர் 6-வது வரிசையில் விளையாடுவார். அவருக்கு தன்னம்பிக்கை கிடைத்து விட்டால் போதும். மென்மேலும் அற்புதமாக செயல்படுவார். வெளிநாட்டு ஆடுகளங்களிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இதுவரை 11 டெஸ்டுகளில் ஆடி 30 விக்கெட்டும், 4 அரைசதம் உள்பட 545 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






