அன்ஷுல் கம்போஜிக்கு வாய்ப்பு கொடுத்த நிர்வாகம் அவருக்கு ஏன் கொடுக்கவில்லை..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் அன்ஷுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்கினார்.
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெற்றிருந்தார். திறமையான பந்துவீச்சாளரான அவருக்கு இந்த தொடரின் ஏதாவது ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அவர் வாய்ப்பை பெறவில்லை. இது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதேவேளை இந்த தொடரின் 4-வது போட்டிக்கு முன்னதாக நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயமடைந்ததால் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்ட அன்ஷுல் கம்போஜ் அந்த போட்டியில் களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் அவர் அசத்தவில்லை. கடைசி போட்டியில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் அன்ஷுல் கம்போஜிக்கு வாய்ப்பு கொடுத்த இந்திய அணி நிர்வாகம் அர்ஷ்தீப் சிங்குக்கு ஏன் கொடுக்கவில்லை? என்று முன்னாள் வீரரான அருண் லால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இந்தப் பயணத்தில், அர்ஷ்தீப் சிங் அணியில் இருந்தார். ஆனால் 16 பேர் கொண்ட அணியில் இல்லாத ஒரு வீரரை (அன்ஷுல் கம்போஜ்) விமானத்தில் அழைத்து வந்து அவருக்கு அறிமுக வாய்ப்பினை கொடுத்த நிர்வாகம் ஏன் அர்ஷ்தீப் சிங்கிற்கு கொடுக்கவில்லை? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை வலைப்பயிற்சியில் அவரது (அர்ஷ்தீப் சிங்) பார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லாமல் இருக்கலாம். நான் அங்கு இல்லை, அதனால் நான் கருத்து தெரிவிக்க முடியாது” என்று கூறினார்.






