ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது ஏன்..? கம்பீர் விளக்கம்

ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. முன்னணி பவுலர்களான முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி ஆகியோரை காட்டிலும் 3 வடிவிலான போட்டிகளிலும் அதிக வாய்ப்புகளை பெறுகிறார்.
அந்த வாய்ப்புகளில் அவர் சில போட்டிகளில் அசத்தினாலும் பெரும்பாலான போட்டிகளில் சொதப்பி வருகிறார். இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர்தான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதனை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சித்தனர்.
இந்நிலையில் ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படுவது ஏன்? என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அணிக்கு உகந்த 20-25 வீரர்களை அடையாளம் காண விரும்புகிறோம். அதற்காகத்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளம் வீரர்களை களம் இறக்குகிறோம். ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்குள் எங்களுக்கு நிலையான 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை.
ஹர்ஷித் ராணா வேகப்பந்து வீசுவது மட்டுமின்றி, 8-வது வரிசையில் இறங்கி பேட்டிங் செய்யும் திறனும் கொண்டுள்ளார். அதுவே ஒரு முக்கிய காரணமாகும். அப்படித்தான் நம்மால் சமநிலையைக் கண்டறிய முடியும். அவர் நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உருவெடுத்தால் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் வெற்றிகரமாக உருவாக நீண்ட தொலைவு இருக்கிறது” என்று கூறினார்.






