மகளிர் உலகக்கோப்பை: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு.. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம்

image courtesy:ICC
இந்த தொடரில் அனைத்தும் போட்டிகளுக்கும் பெண் நடுவர்களையே ஐ.சி.சி. நியமித்துள்ளது.
துபாய்,
13-வது மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் பணியாற்றும் நடுவர்களின் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த உலகக்கோப்பை போட்டியில் பணியாற்றும் நடுவர்கள் அனைவரும் மகளிர்களாக இருப்பார்கள் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
கள மற்றும் டிவி நடுவர்கள் பட்டியல்: லாரென் ஏகன்பேக், கெரின் கிளாஸ்டி (இருவரும் தென் ஆப்பிரிக்கா), கேன்டாஸ் லா போர்டே, ஜாக்குலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கிம் காட்டன் (நியூசிலாந்து), சாரா தம்பனேவானா (ஜிம்பாப்வே), ஷதிரா ஜாகிர் ஜெசி (வங்காளதேசம்), கிளாரி போலோசக், எலோயிஸ் ஷெரிடான் (ஆஸ்திரேலியா), சூ ரெட்பெர்ன் (இங்கிலாந்து), என்.ஜனனி, விருந்தா ரதி, காயத்ரி வேணுகோபாலன் (மூன்று பேரும் இந்தியா), நிமாலி பெரேரா (இலங்கை).
போட்டி நடுவர்கள்: டிருடி ஆண்டர்சன் (நியூசிலாந்து), ஷான்ட்ரே பிரிட்ஸ், (தென் ஆப்பிரிக்கா), ஜி.எஸ்.லட்சுமி (இந்தியா), மிட்செல் பெரேரா (இலங்கை).
இவர்களில் ஜனனியும், காயத்ரியும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.






