ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியா-பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை

இன்று நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கியில் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை,
14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா உள்பட 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் ஆடுகின்றன. இந்த நிலையில் சென்னையில் இன்று 4 கால்இறுதி ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.
இரவு 8 மணிக்கு நடக்கும் கடைசி கால்இறுதியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 7-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
2 முறை சாம்பியனான (2001, 2016) இந்திய அணி, லீக் ஆட்டங்களில் சிலி (7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்து தனது பிரிவில் (பி) முதலிடம் பிடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தது. இதுவரை 29 கோல்கள் அடித்து இருக்கும் இந்தியா ஒரு கோல் கூட வாங்கவில்லை. ரோகித் தலைமையிலான இந்திய அணியில் முன்கள வீரர்கள் தில்ராஜ் சிங் (6 கோல்), மன்மீத் (5), அர்ஷ்தீப் சிங் (4), அஜீத் யாதவ், குர்ஜோத் சிங் (தலா 2) நல்ல நிலையில் உள்ளனர்.
பெல்ஜியம் அணி லீக் ஆட்டங்களில் நமிபியா(12-1), எகிப்தை (10-0) எளிதில் பந்தாடியது. 2-வது ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் பணிந்த அந்த அணி தனது பிரிவில் (டி) 2-வது இடம் பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. 22 கோல்கள் அடித்து இருக்கும் பெல்ஜியம் அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. லீக்கில் அசத்திய இந்திய அணிக்கு இனிமேல் தான் உண்மையான சோதனை காத்திருக்கிறது.
மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்-நியூசிலாந்து (பகல் 12.30 மணி), ஜெர்மனி-பிரான்ஸ் (பிற்பகல் 3 மணி), அர்ஜென்டினா-நெதர்லாந்து (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, மதுரையில் நேற்று நடந்த 17 முதல் 24-வது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரியா-நமிபியா சந்தித்தன. வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோலடித்து சமநிலை வகித்ததால், வெற்றி, தோல்வியை முடிவு செய்ய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரியா 2-0 என்ற கோல் கணக்கில் நமிபியாவை வென்றது. மற்ற ஆட்டங்களில் வங்காளதேசம் 13-0 என்ற கோல் கணக்கில் ஓமனையும், தென்கொரியா 6-3 என்ற கோல் கணக்கில் எகிப்தையும், சீனா 3-2 என்ற கோல் கணக்கில் கனடாவையும் வீழ்த்தின.
சென்னையில் நடைபெற்ற 9 முதல் 16-வது இடத்தை தீர்மானிப்பதற்கான ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் சிலியையும், தென்ஆப்பிரிக்க அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், அயர்லாந்து அணி 5-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தையும், ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் சாய்த்தன.






