ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: போட்டி அட்டவணை வெளியீடு

image courtesy:twitter/@TheHockeyIndia
ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.
சென்னை,
ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் 14-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக்கோப்பை ஆக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வருகிற நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் இந்த போட்டி அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்தும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்தும், ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனாவும், ‘டி’ பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமிபியாவும், ‘இ’ பிரிவில் நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியாவும், ‘எப்’ பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வங்காளதேசமும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பிடிக்கும் அணிகளில் இரண்டு சிறந்த அணிகள் என 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அட்டவணையை வெளியிட்டார்.
இதன்படி லீக் ஆட்டங்கள் சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உள்ளிட்ட 41 ஆட்டங்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திலும், 31 ஆட்டங்கள் மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.
இதில் தொடக்க நாளில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி சிலி உடன் மோதுகிறது. இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னையில் நவ.29-ந் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் டிச.2-ந் தேதி சுவிட்சர்லாந்தை (இரவு 8 மணி) மதுரையில் சந்திக்கிறது.






