பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதியில் சாதிக்குமா சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி..?
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் பி.வி. சிந்து, லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில் 6-வது நாளான நேற்று பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, எஸ்தோனியா வீராங்கனை கிறிஸ்டின் கூபா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-5, 21-10 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டி உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் ஜோனதனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- வூ யிக் சோ இணையுடன் மோத உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பேட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்குள் நுழைந்துள்ள நிலையில் காலிறுதியில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.