உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யாவுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை

திவ்யா மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஆவார்.
நாக்பூர்,
ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் கடந்த வாரம் நடந்த 3-வது 'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த திவ்யா தேஷ்முக் டைபிரேக்கர் முடிவில் 2½-1½ என்ற புள்ளி கணக்கில் சக நாட்டவரான கோனெரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். முதல் முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்து வரலாறு படைத்த திவ்யா கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் எட்டி அசத்தினார். 19 வயது திவ்யா மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஆவார்.
உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த திவ்யா தேஷ்முக்குக்கு மராட்டிய அரசு சார்பில் பாராட்டு விழா நாக்பூரில் நேற்று நடந்தது. இதில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு திவ்யாவை பாராட்டியதுடன் ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த விழாவில் மந்திரிகள் மாணிக்ராவ் கோகடே, ஆஷிஷ் ஜெய்ஸ்வால், எம்.எல்.ஏ. கிருஷ்ண கோப்டே, எம்.எல்.சி.பரினே புகே உள்பட பலர் கலந்து கொண்டனர்.






