இஸ்ரேல் தடகளத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை

6 நிமிடம் 13.92 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனையும் படைத்தார்.
ஜெருசலேம்,
கிராண்ட்ஸ்லாம் ஜெருசலேம் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இஸ்ரேலில் நடந்தது. இதில் பெண்களுக்கான 2 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அங்கிதா தயானி 6 நிமிடம் 13.92 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனையும் படைத்தார்.
இஸ்ரேலின் அட்வா கோஹன் வெள்ளிப்பதக்கமும் (6 நிமிடம் 15.20 வினாடி), டென்மார்க்கின் ஜூலியானே ஹிவிட் வெண்கலப்பதக்கமும் (6 நிமிடம் 17.80 வினாடி) பெற்றனர்.
இதற்கு முன்பு பாருல் சவுத்ரி 6 நிமிடம் 14.38 வினாடிகளில் இலக்கை கடந்ததே இந்திய அளவில் தேசிய சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ள 23 வயதான அங்கிதாவுக்கு இந்த வெற்றியின் மூலம் அடுத்த மாதம் டோக்கியோவில் நடக்கும் உலக தடகளத்தின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டிக்கு உலக தரவரிசை கோட்டா அடிப்படையில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. .






