மகளிர் உலகக்கோப்பை செஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய வீராங்கனை திவ்யா சாதனை

image courtesy:twitter/@FIDE_chess
இதன் மூலம் திவ்யா தேஷ்முக், கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெற்றார்.
பதுமி,
மகளிர் உலகக்கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்யியை சந்தித்தார். முதலாவது ஆட்டம் டிரா ஆன நிலையில் நேற்று 2-வது முறையாக மல்லுக்கட்டினர். இதில் வெற்றி வாகை சூடிய திவ்யா ஜோங்யியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் உலகக்கோப்பை செஸ் போட்டியில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா தேஷ்முக், படைத்தார். அத்துடன் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றார்.
இதன் மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜியை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஹம்பி, 75-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். ஏற்கனவே முதலாவது ஆட்டமும் டிராவில் முடிந்திருந்தது. தற்போது இருவரும் தலா ஒரு புள்ளிகளுடன் சமநிலையில் இருப்பதால் வெற்றியாளரை தீர்மானிக்க இன்று டைபிரேக்கரில் மீண்டும் மோதுகிறார்கள்.






