உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் இன்று தொடக்கம்

கோப்புப்படம்
குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட 206 வீரர்கள் பங்கேற்கும் உலகக் கோப்பை செஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
கோவா,
11-வது ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நவம்பர் 27-ந்தேதி வரை நடக்கிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பும் இந்த செஸ் திருவிழாவில் உலக சாம்பியன்ஷிப்பை வென்றவரான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹல் சரின், அரவிந்த் சிதம்பரம் மற்றும் அனிஷ் கிரி (நெதர்லாந்து), வெஸ்லி சோ, லெவோன் ஆரோனியன் ( இருவரும் அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), வெய் யி (சீனா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்) உள்பட 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கிறாார்கள்.
மகளிர் உலக சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் ‘வைல்டு கார்டு’ மூலம் அழைக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் விளையாடும் ஒரே வீராங்கனை இவர் தான். அதே சமயம் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ கருனா, ஹிகரு நகமுரா (அமெரிக்கா) போட்டிக்கு தகுதி பெற்றும் விளையாட மறுத்து விட்டனர்.
இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் வீரர்கள், உலக சாம்பியனுடன் மோதும் வீரரை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
‘நாக்-அவுட்’ போட்டியான இது 8 ரவுண்டுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களாக கிளாசிக் முறையில் நடக்கும். இதில் அதிக புள்ளிகள் எடுப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். சமநிலை நீடித்தால் டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும். ஆட்டத்தில் முதல் 40 நகர்த்தலுக்கு இருவருக்கும் தலா 90 நிமிடங்களும், எஞ்சிய போட்டிக்கு 30 நிமிடங்களும் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடி அதிகரிக்கப்படும்.
ஒவ்வொரு ரவுண்டும் 3 நாட்கள் நடைபெறும். 7-வது ரவுண்டின் போது அரையிறுதி நடத்தப்படும். கடைசி ரவுண்டில் இறுதி ஆட்டம் மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டம் அரங்கேறும். இதில் டாப்-50 இடங்களை பெற்றுள்ள வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுவார்கள். ‘பை’ சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், கேசிபெஸ் நோகர்பெக் (கஜகஸ்தான்), ராஜா ரித்விக் (இந்தியா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.17½ கோடியாகும். இதில் வாகை சூடும் வீரருக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.75 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடத்தப்படும். முதல் சுற்று ஆட்டம் நவ.1 முதல் 3-ந்தேதி வரை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.






