லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் நிமோனா வரை: சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்


லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் நிமோனா வரை: சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 9 July 2023 11:57 AM GMT (Updated: 9 July 2023 12:07 PM GMT)

இந்த வாரம் வெளியான சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

தி விட்சர் சீசன் 3

போலந்து எழுத்தாளர் அன்ட்ரேவின் கற்பனையில் உதித்த மாயாஜால கதைக்கு உயிர் கொடுத்த படைப்புகள் வரலாற்றில் இடம்பிடித்தன. இணையத்தொடராக நெட்பிளிக்சுக்கு அதை லாரன் சிமிட் உருவாக்கியுள்ளார். பில்லி சூனியம், ஏவல், மாந்திரீகம் நிறைந்த உலகில் மனிதத்தை கொல்லும் அரக்கர்களும், கொடூர மிருகங்களும் உலவுகின்றன. மனிதர்களால் எதிர்க்க முடியாத அதனை 'விட்சர்ஸ்' கூட்டம் வதம் செய்கிறது. விட்சர்சின் அசகாய வேட்டைக்காரன் ஜெரால்ட். தந்திர உலகில் காசுக்காக அவற்றை கொல்லுகிறான். சிற்றரசு நாட்டின் இளவரசி சிரியை காக்கும் பொறுப்பு ஜெரால்டுக்கு வருகிறது. விசேஷ சக்திகள் கொண்ட சிரியை அடைய குட்டிச்சாத்தான்கள், சூனியக்காரர்கள், ராஜாக்கள் கூட்டம் சுற்றுகிறது. தோண்டப்படும் பிரேதக்குழிகளில் இருந்து சிரியை நாயகன் காப்பற்றுவதே இதன் கதை.


3-ம் பாக தொடக்கத்தில் சிரி, காதலி யென்னெபருடன் இணைந்து ஜெரால்டு தலைமறைவாக வாழ்கிறார். பிரான்சஸ்கா தலைமையில் சாத்தான்களும், மாயாவியான ரின்சும் சிரியை நெருங்க சதிவலை பின்னுகிறார்கள். யென்னெபரிடம் சிரியை விட்டுவிட்டு ரின்சை ஏவிய மந்திரவாதி தலைவனை தேடி ஜெரால்டு செல்கிறான். பிரிவுக்கு பின் புதுவித பிரச்சினைகளுடன் இவர்கள் மூவரும் சந்திக்கிறார்கள். அதனை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லியுள்ளனர்.

அசுரர் ஜெரால்டாக ஹென்றி கேவில் வாழ்ந்துள்ளார். எதிரிகளை துவம்சம் செய்வதிலும், சிரிக்கு வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுப்பதிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கேவிலின் இந்த பாத்திர நடிப்பு முடிவுக்கு வருவது அதிர்ச்சியே. பரேயா ஆலன் சிரியாக இயல்பு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யென்னெபராக அன்யா வருகிறார்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2

இந்திய பெண்களின் உணர்வுகள் குறித்தான பார்வையை வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் சொல்லும் துணிச்சல் படைப்பு இது. 2018-ல் இதன் முதல் பாகம் பிரபல இயக்குனர்கள் கொண்டு எடுக்கப்பட்டு பேசுபொருளானது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக 4 சிறுகதைகளை உள்ளடக்கி 2-ம் பாகம் வந்துள்ளது. பால்கியின் கதையோடு தொடங்கும் இது கணவன்-மனைவியின் நெருக்கத்தை ஆராயச்சொல்கிறது. மிருணாள் தாகூர், அங்கத் பெடியின் திருமணம் முடிவாகும் நிலையில் அதற்கு பாட்டி நீனா குப்தா முட்டுக்கட்டை போடுகிறார். திருமண உறவை அன்யோன்யம் பலப்படுத்தும் என்பதை நகைச்சுவை கதை வழியே விளக்கியுள்ளனர்.


கொங்கானா சர்மாவின் கதை பெண்ணின் ஆசைகள் குறித்து பேசுகிறது. சமூகத்தின் இரு துருவங்களாக இருக்கும் பெண்கள் தங்களுள் எழும் பாலியல் உணர்வுகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது. பணக்காரியாக திலோதமா அசத்தியுள்ளார். வேலைக்காரியாக வரும் அம்ருதா சிறப்பு. புதுவித கதையை கொண்டது.

சுஜய்யின் கற்பனை படைப்பு அதனை பின்தொடர்கிறது. தான் வந்த கார் விபத்தில் சிக்க உதவிக்கோரி அருகே உள்ள கிராமத்திற்கு விஜய் செல்கிறார். எதிர்பாராமல் முன்னாள் மனைவி தமன்னாவை அங்கு காண அவருக்குள் காதல் தீ பொங்குகிறது. ஆனால் விஜய்யின் விஜயம் எக்குதப்பாக, அதனால் ஏற்படும் விளைவுகள் சஸ்பென்ஸ்-திரில்லர் கதை வழியே விவரிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கஜோல் நடிப்பில் அமித் சர்மாவின் கதை வருகிறது. வக்கிரபுத்தி கொண்ட கணவரை இச்சை என்னும் ஆயுதத்தால் ஒழிக்க நினைக்கும் பெண்ணின் கதை. மனித உணர்வுகளின் ஒன்றான காமம் குறித்து இந்திய தொடர் விளக்கிய விதம் புதுமை. நெட்பிளிக்ஸ் படைப்பான இதனை வயது வந்தோர் பார்க்க தகுந்தது.

நிமோனா

ஸ்டீவன்சனின் புகழ்பெற்ற கிராபிக் நாவல், திரைப் படைப்பாக மாற சர்ச்சைகளையும், நாட்களையும் கடந்தது. தன்பாலின ஈர்ப்பை ஊக்குவித்தாலும் மறுமலர்ச்சி எண்ணங்களுக்கு வித்திடும் படைப்பாக 'நிமோனா' உள்ளது. எதிர்கால உலகில் நடக்கும் இந்த கதையில் குறிப்பிட்ட வம்சத்தை சேர்ந்தவர்கள் மாவீரர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களை கொண்டு அமைதி நிலைநாட்டப்படுகிறது. ராணியின் விருப்பத்தின்படி அடித்தட்டு குடிமகனான பாலிஸ்டருக்கு ராஜ்ஜியத்தை பாதுகாக்கும் மாவீரர் பணி வருகிறது. அதற்கு பாலிஸ்டரின் காதலனும், குறிப்பிட்ட வம்சத்தை சேர்ந்த பிரபல வீரருமான கோல்டன்லயன் ஆமோதிக்கிறார். பதவியேற்பு விழாவின்போது ராணியை பாலிஸ்டர் கொன்றுவிட நாடு கொந்தளிக்கிறது. காதலனால் கை துண்டிக்கப்பட்ட நிலையில் பாலிஸ்டர் தலைமறைவாகிறார். தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மாவீரர்கள் அவருக்கு சல்லடை போடுகிறார்கள்.


கொடிய வில்லனாக நாடே பாவிக்கும் பாலிஸ்டருக்கு எடுபிடியாக சேர சிறுமி நிமோனா துடிக்கிறாள். உருவங்களை மாற்றும் வல்லமை கொண்ட நிமோனா பாலிஸ்டருடன் இணைந்து தீய செயல்கள் செய்ய நினைக்கிறாள். ஆனால் பாலிஸ்டரை போல் சூழ்நிலை காரணமாக ஒதுக்கப்பட்டவள் நிமோனா. அவளின் கதை என்ன? ராணியை உண்மையில் பாலிஸ்டர் கொன்றானா? என்பதை மனதை புடமிடும் திரைக்கதையை கொண்டு உணர்ச்சி ததும்ப எடுத்துள்ளனர்.

நிமோனா பாத்திரத்தின் வழியே சமூக அவலங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அடக்குமுறையை ஆதரிக்கும் சமூகத்தை கண்டிக்கவும் தற்கால அரசியலமைப்பின் சாரத்தை ஆராய்ந்து பார்க்கவும் வைக்கிறது. எதிர்மறை எண்ணங்களை விலக்கி சுய நம்பிக்கையை மேம்படுத்தும் இதனை நெட்பிளிக்சில் பார்க்கலாம்.

ஜாக் ரியன் சீசன் 4

அமெரிக்காவின் முன்னாள் ராணுவ வீரர் டாம் கிளான்சி. நாட்டிற்கு தான் ஆற்ற துடித்த சேவைகளை நாவலாக எழுத அதன் புகழ் விண்ணை தொட்டது. அதனை தழுவி அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடராக வெளியிட்டது. ரசிகர்கள் மனதில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இதனின் இறுதி அத்தியாயம் தற்போது வெளியாகி வருகிறது. நாட்டின் விசுவாசியாக சி.ஐ.ஏ ஏஜெண்டு ஜாக் ரியன் இருக்கிறார். பயங்கரவாதிகளின் எண்ணங்கள், உலகுக்கு கேடு விளைக்கும் திட்டங்கள், 3-ம் உலகப்போர் முதலானவற்றை தவிடு பொடியாக்குகிறார். இதனால் அமெரிக்கா உளவு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது.


அதிகாரப்பூர்வமற்ற வேலையாக மியான்மருக்கு ரியன் செல்ல அங்கு உலகையே அச்சுறுத்தும் போதைப்பொருள் மாபியா பற்றி துப்பு கிடைக்கிறது. அமெரிக்காவுக்கு திரும்பிய பின்னர் அது குறித்து ஆராயும் வேளையில் பூதம் கிளம்ப கதை சூடு பிடிக்கிறது. சர்வதேச போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தன் நிறுவனம் செயல்படுவது அவனுக்கு தெரிகிறது. மேலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது அம்பலமாகிறது. உளவுத்துறையின் முதன்மை உளவாளியான மைக்கேல் பினாவின் நட்பு ரியனுக்கு கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து சி.ஐ.ஏ-வுக்குள் ஊடுருவிய 'களை'களை வேரறுப்பதே கதை. நாயகன் ஜாக் பாத்திரத்தில் ஜான் க்ராசின்ஸ்கி நடித்துள்ளார். நாயகனின் காதலியாக கேத்தி, பினாவாக டொமிங்கோ சாவேஸ் வருகிறார்கள். ஆக்ஷன்-திரில்லருடன் கூடிய உளவு தொடரான இதனை தவறவிட வேண்டாம்.


Next Story