தன்னம்பிக்கையின் சிகரம் ஹெலன் கெல்லர்..!


தன்னம்பிக்கையின் சிகரம் ஹெலன் கெல்லர்..!
x

புகழ்பெற்ற எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் சமூக பணியில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியவர் ஹெலன் கெல்லர்.

இளமையில் துயரங்கள்...

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் ஹெலன் ஆடம்ஸ் கெல்லர், 1880-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி பிறந்தார். பிறந்த சில மாதங்களிலேயே கடும் காய்ச்சலால் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். இதனால் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் பெரிதும் தவித்தார்.

ஹெலன் 1887-ம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் உதவியுடன் பார்வை இழந்தோருக்கான பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்போது கிரகாம்பெல் 'ஆன் சல்லிவன்' என்பவரை ஹெலனுக்கு ஆசிரியராக நியமித்தார். பிறர் பேசும் பொழுது அவர்கள் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் பேசுவதை புரிந்து கொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களை புரிந்து கொள்ள பழக்கப்படுத்தினார்.

இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டுத்தொட்டு உணர்ந்து கற்றுக்கொண்ட இவர், சிறிது சிறிதாக எழுத கற்றுக் கொண்டார். அதன்பிறகு பார்வையற்றோருக்கான பிரெய்லி எழுத்து முறையை கற்றுக் கொண்டார். எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறமை ஹெலனுக்கு இயல்பாகவே இருந்தது.

நம்பிக்கையால் வளர்ந்தார்...

கெல்லர் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளை கற்றார். 1904-ம் ஆண்டு ஆசிரியர் சல்லிவனுடன் நியூயார்க் சென்று, காது கேளாதோருக்கான ரைட்ஹீமாசன் பள்ளியில் சேர்ந்து படித்தார். பிறகு அங்குள்ள ஆசிரியை சாரா புல்லர் பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளை தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேசக் கற்றுக் கொண்டார். தன்னால் தெளிவாகப் பேச முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டாலும் சிறிதுகூட மனம் தளராமல் முயற்சிகளை மேற்கொண்டார். தானாக பாடங்களை கற்ற கெல்லர் 1900-ல் ராட்கிளிப் பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி, காது கேளாமல் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார். கெல்லரின் எழுத்தார்வத்தை வெளிக்கொண்டுவர ஆஸ்திரேலிய அறிஞரான வில்லம் ஜெருசலம் உதவினார். 1903-ம் ஆண்டு 'தி ஸ்டோரி ஆப் மை லைப்' என்ற தலைப்பில் சுயசரிதையை எழுதினார். இந்த புத்தகம் மராத்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. கெல்லர் தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.

சமூகப் பணியில்...

காது கேளாமை, பார்வையின்மை, சமூகம் சார்ந்த பிரச்சினைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பான கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், பத்திரிகைகளுக்கும் எழுதினார். சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். கெல்லர் பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கமற்ற அமைப்பை தன் பெயரில் தொடங்கினார். அதற்காக அல்லும் பகலும் உழைத்தார். உலக நாடுகள் பலவற்றுக்கும் ஆசிரியை ஆன் சல்லிவன் துணையுடன் சுற்றுப்பயணம் சென்றார். பார்வையற்றோருக்கான 'தேசிய நூலகம்' ஒன்றையும் தொடங்கினார்.

கெல்லர் மாற்றுத்திறனாளிகளுக்கான வழக்கறிஞராகவும் பணியாற்றினார். அமெரிக்கா பிறப்பு கட்டுப்பாடு சங்கத்தின் ஆதரவாளராக தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். 1915-ம் ஆண்டு ஜார்ஜ் கெஸ்லருடன் இணைந்து 'ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பை' தொடங்கினார். 40 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர், ஜப்பான் மக்களின் மனங்கவர்ந்த பெண்மணியாக போற்றப்பட்டார்.

மறைவு...

கெல்லர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கினார். 1964-ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி.தாம்சன், அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார். இது அமெரிக்க குடியரசின் மிக உயர்ந்த பதக்கங்களுள் ஒன்றாகும்.

தன் வாழ்க்கை பாடம் மூலம், பலருக்கும் தன்னம்பிக்கை தரும் பெண்மணியாக வாழ்ந்த ஹெலன் கெல்லர் 1968-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி உயிர் துறந்தார்.


Next Story