மஸ்லின் துணி


மஸ்லின் துணி
x

மஸ்லின் துணி, பெயர் வித்தியாசமாக தோன்றினாலும், இது முழுக்க முழுக்க கைத்தறி ஆடை. உலகிலேயே மிகவும் மெலிதான, லேசான ஆடை இது.

ஓர் ஆடையின் நுண்மையான தன்மை, லேசான தன்மையின் அடிப்படையில் அலகுகள் தரப்படுவது உண்டு. அந்த வகையில் காதி பருத்தி துணிகளின் அலகு 30-லிருந்து தொடங்கும். மஸ்லினின் அலகோ 400-லிருந்து 600 வரை என்றால், அதன் மெல்லிய தன்மையை புரிந்து கொள்ளலாம். மொகலாய அரசர்கள் காலத்திலிருந்தே மஸ்லின் ஆடைகள் புகழ் பெற்றிருந்தன. மஸ்லின் பற்றி பரவலாக கேள்விப்படும் செவிவழிச் செய்தி, சிறு மோதிரத்துக்குள் மொத்த மஸ்லின் துணியையும் நுழைத்து வெளியே எடுத்து விடும் அளவுக்கு அவை மெலிதாக இருப்பதுதான்.

வங்கத்தை சேர்ந்த டாக்கா மஸ்லின் துணிகள் உலகப் புகழ்பெற்றவை. டாக்கா மஸ்லின் சேலைகள் ஒரு தீப்பெட்டிக்குள்ளோ, டிபன் பாக்சிலோ அடைத்துவிடும் அளவுக்கு லேசானவை, நுணுக்கமாக நெய்யப்பட்டவை. மால்-மால் என்ற பெயரில் நெய்யப்பட்ட மிகவும் நுண்மையான மஸ்லின் ஆடைகள் 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தை உருவாக்கின. மஸ்லின் துணியில் தைக்கப்பட்ட ஓர் சட்டையின் எடை 10 கிராம்தான் இருக்கும். பேனைப் போட்டால் பறந்தே போய்விடும் அளவுக்கு லேசானது. இந்த மஸ்லின் துணியை எந்திர நெசவால் உருவாக்க முடியவில்லை. அரிதான இந்த கலை மீட்கப்பட்டுள்ளது. கைத்தறியின் பெருமையான இந்த மஸ்லின் துணிகள், நுணுக்கமான நெசவு வேலைப்பாட்டை கொண்ட ஆடைகள் புகழ்பெற்று வருகின்றன.

அனைத்து மஸ்லின் ஆடைகளும் இயற்கைக்கு இணக்கமாக உற்பத்தி செய்யப்படுபவை, இயற்கை வழியில், இயற்கை சாயம் ஏற்றப்பட்ட, நவீன கைத்தறி ஆடைகள். விவசாயிகள், பருத்தியெடுப்பவர்கள், நூல்நூற்பவர்கள், சாயமேற்றுபவர்கள், நெசவாளர்கள் இணைந்து இந்த கலையை மீட்டெடுத்து வருகிறார்கள்.


Next Story