கோடைகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை


கோடைகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
x

கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது. இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.

ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.

கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி, மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைக்கால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம். காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் வைட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது. மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.


ப.கோபிகா, 12-ம் வகுப்பு, ஜெ.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம்.


Next Story