நோயில் இருந்து காக்கும் பவளம்


நோயில் இருந்து காக்கும் பவளம்
x

நவரத்தினங்களில் ஒன்று பவளம். நம் நாட்டில் நகைகளில் பவளத்தை பதித்து அணிகின்றனர். ரோமானியர்கள் குழந்தைகளை நோய்களில் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களது கழுத்தில் பவளத்தை கட்டி தொங்க விடுகின்றனர் என வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உடல் அமைப்பு

இத்தாலி நாட்டில் திருஷ்டிபடாமல் இருக்க பவளம் அணியப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நகைகளிலும், மோதிரங்களிலும் பவளத்தை பதித்து அணிந்து வருகின்றனர். ஜெல்லி அல்லது கூழ் போன்ற உடல் அமைப்பு கொண்ட ஒரு கடல்வாழ் பிராணியின் எலும்பு கூட்டமே பவளம் எனப்படுகிறது.

இந்த கடல்வாழ் பிராணி பவளப்புழு ஆகும். இதற்கு பல கால்கள் உண்டு. இந்த புழு தனக்கு பாதுகாப்பு கொடுக்க தன்னுடைய உடலுக்கு வெளியே எலும்பு கூடு போல பவளத்தை உண்டாக்குகிறது. ஒவ்வொரு பவளப்புழுவுக்கும் குழாய் போன்ற உடல் அமைப்பு உள்ளது. குழாயினுடைய மூடிய பக்கத்தில் துழாவுதற்காகவும், இயங்குவதற்காகவும் பயன்படுகின்ற உணர்ச்சி கொடுக்குகள் உருவாகி உள்ளது. இந்த புழுவின் உடலில் இருந்து சுரக்கும் சுண்ணாம்பு பொருளினால் பவள எலும்புக்கூடு உண்டாகிறது.

சிறிய புழுக்கள்

குவளை போன்ற அமைப்பில் உருவாகும் எலும்புக்கூடு புழுவின் வெளி உடலுக்கு மேலும், கீழுமாகவும் நான்கு பக்கங்களிலும் சுற்றியுள்ளது. பவளப்புழு நீரின் உள்ளே பாறையின் அடிப்பகுதியுடன் ஒட்டிக் கொள்கிறது.

அதனுடைய உடம்பில் இருந்து சிறிய புழுக்கள் பூ மொட்டுகள் மலர்வதை போல புதிது, புதிதாக தோன்றுகின்றன. தாய்ப்புழு இறந்த பின் குட்டிப்புழுக்கள் அதனுடைய எலும்புக்கூட்டோடு ஒட்டிக்கொண்டு வளர்ந்து மொட்டுக்கள் போன்று பல புழுக்களை உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு பவளம் லட்சக்கணக்கில் வளர்ந்து பெருகுகின்றன. படுகை, படுகையாக ஒன்றின் மீது ஒன்று பவளம் படிந்து கடல்நீர் இடையே பாறைகள் போலவும், தீவுகள் போலவும் உருவாகின்றது.

மத்திய தரைக்கடல்

கடலில் செல்லும் கப்பல்களுக்கு இந்த பவளப்பாறைகள் தடைகளை ஏற்படுத்துகின்றன. பவளப்புழுவினுடைய எலும்பு கூடுகளில் இருந்து பல நிறமான பவளங்கள் நமக்கு கிடைக்கின்றன.

பவளம், வெப்பநிலை அதிகமுள்ள பசிபிக் கடல், இந்து மகா சமுத்திரம், மத்திய தரைக்கடல் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. மத்திய தரைக்கடலில் சில பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற பவளங்கள் கிடைக்கின்றன. பவளக்கூடுகளில் இருந்து கிடைக்கும் பவளம் பளபளப்பாக இருப்பதில்லை. ஆதலால் இதனை பளபளப்பாக்க பட்டை தீட்டப்படுகிறது. பளபளப்பு பெற்ற பவளங்கள் தான் நகைகளில் பயன்படுத்தப்படுகிறது.


Next Story