10 ஆண்டுகளாக 203 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த நபர்


10 ஆண்டுகளாக 203 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த நபர்
x

உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் சுற்றுப்பயணம் கனவாகவே ஆழ்மனதில் நிலைத்திருக்கிறது. அதேவேளையில் சரியான திட்டமிடுதலுடன், சிக்கனத்தை பின்பற்றி உலகை வலம் வருபவர்களும் இருக்கிறார்கள்.

டென்மார்க்கை சேர்ந்த தோர்ப்ஜோர்ன் தினமும் மிகவும் குறைவான தொகையை செலவு செய்து 203 நாடுகளுக்கு பயணம் செய்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவர் தினமும் செலவளித்த சராசரி தொகை எவ்வளவு தெரியுமா? 20 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் 1,655 ரூபாய்.

இந்த தொகையிலேயே உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளை தினமும் சமாளித்திருக்கிறார். எந்தவொரு சூழலிலும் 20 டாலருக்கு மேல் செலவளிக்கக்கூடாது என்ற சிக்கனம் அவரது ஒட்டுமொத்த செலவை வெகுவாக குறைய வைத்திருக்கிறது.

திட்டமிட்டபடியே பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவும் வைத்திருக்கிறது. எந்தவொரு நாட்டிற்கு செல்வதற்கும் அவர் விமானத்தை பயன்படுத்தவில்லை. அத்துடன் சைக்கிள், இரு சக்கர வாகனம், கார் என சொந்த வாகனத்திலும் பயணிக்கவில்லை.

எல்லா நாட்டிலும் ரெயில், பஸ், படகு, கப்பல் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தியே உலக பயணத்தை முடித்திருக்கிறார். பொது போக்குவரத்தின் மூலமாகவே ஒவ்வொரு நாட்டு மக்களுடனும் நெருக்கமாக பழகும் சூழல் அமைந்ததாகவும் கூறுகிறார்.

தோர்ப்ஜோர்ன் 2013-ம் ஆண்டு தனது உலக சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் 203-வது நாடாக மாலத்தீவுக்கு பயணித்திருக்கிறார். அத்துடன் தனது உலக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து பயணிகள் கப்பல் மூலம் டென்மார்க் புறப்பட்டு சென்றிருக்கிறார். எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கு குறைந்தபட்சம் ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.

ஆனால் அந்தந்த நாடுகளில் இருக்கும் பிரபலமான இடங்களும், அங்குள்ள மக்களின் அன்பான அணுகுமுறையும், வாழ்க்கை முறையும் அதிக நாட்கள் அவரை தங்க வைத்துவிட்டது. உலகில் இருக்கும் எல்லா நாட்டுக்கும் சென்ற பிறகுதான் வீடு திரும்ப வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்திருக்கிறார். ஐ.நா அங்கீகரித்திருக்கும் 195 நாடுகளையும் தாண்டி 203 நாடுகளுக்கு விஜயம் செய்துவிட்டார். இருப்பினும் ஒருமுறை கூட விமானத்தை பயன்படுத்தாமல் அனைத்து நாடுகளுக்கும் சென்றதை தனது சாதனையாக கருதுகிறார். 203 நாடுகளுக்கு பயணம் செய்ய 3500 நாட்களுக்கு மேல் தோர்ப்ஜோர்ன் பயணம் செய்திருக்கிறார்.

''நீங்கள் எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் உள்ளூர் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகளைப் போல் பயணம் செய்தால் உலகின் பல பகுதிக்கு செல்வதும், அங்கு வாழ்வதும் சுலபமானது. அதற்கு அதிக தொகை தேவைப்படாது. அந்த நாட்டு மக்கள் போல வாழ்ந்து விட்டு மலிவான செலவிலேயே பயணத்தை முடித்துவிடலாம்.

உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கும், அங்குள்ள கலாசாரங்களைக் கண்டறிவதற்கும், புதிய நண்பர்களை உருவாக்குவதற்கும் கோடீஸ்வரராக இருக்கத் தேவையில்லை. சராசரி மனிதனாலேயே அவை சாத்தியமாகும். இருப்பினும் ஒரு நாள் செலவு 20 டாலருக்குள் முடிந்தது எனது அதிர்ஷ்டம்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

தனது சுற்றுப்பயணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் சொல்கிறார். இறுதி நாடான மாலத்தீவுக்கு சென்றடைந்தபோது என் திட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றது. மீண்டும் டென்மார்க்கிற்குத் திரும்பும்போது மன நிறைவை அளித்தது'' என்றும் கூறினார்.


Next Story