அழகான நிலப்பரப்பு சூழ்ந்த நாடுகள்


அழகான நிலப்பரப்பு சூழ்ந்த நாடுகள்
x
தினத்தந்தி 13 April 2023 4:30 PM GMT (Updated: 13 April 2023 4:30 PM GMT)

உலகின் மிக அழகான நிலப்பரப்புகளை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை இங்கிலாந்து இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இயற்கையின் அழகை அவ்வளவு சுலபமாக அளவிட இயலாது. கண்கவர் தீவுகள், வான மேகத்துடன் உறவாடும் மலை பிரதேசங்கள், மனதுக்கு இதமளிக்கும் கடற்கரைகள், கண்களுக்கு விருந்து படைக்கும் பவளப்பாறைகள், பச்சை பசேல் என பசுமை சூழ்ந்திருக்கும் பள்ளத்தாக்குகள், வறண்ட பாலைவனங்கள், எரிமலைகள், பனிப்பாறைகள் என மாறுபட்ட அம்சங்களை இயற்கை தன்வசப்படுத்தி வைத்துள்ளது. அவை ஒவ்வொன்றும் ஏதாவதொரு வகையில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் உலகின் மிக அழகான நிலப்பரப்புகளை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை இங்கிலாந்து இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடித்த நாடுகள் இடம் பெற்றுள்ளதா என்று பார்ப்போம்.

இந்தோனேசியா

17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்கவர் தீவுகள், வெப்பமண்டல காடுகள் மற்றும் ரம்மியமான காலநிலை நிலவும் கடற்கரைகள் என இயற்கையின் சொர்க்கபுரியாக விளங்கும் இந்தோனேசியா இந்த தரவரிசையில் 10-க்கு 7.77 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

நியூசிலாந்து

எரிமலைகள், பனிப்பாறைகள், அற்புதமான மலை சிகரங்கள் போன்ற நிலப்பரப்புகள் நியூசிலாந்தின் இயற்கை அழகுக்கு சான்றாக விளங்குகின்றன. இவற்றுள் பல இடங்கள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இயற்கை அழகில் 10-க்கு 7.27 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 2-வது இடத்தில் இருக்கிறது.

பப்புவா நியூ கினியா

ஆஸ்திரேலியாவின் வடக்கே அமைந்துள்ள இந்த தீவு அதிக எண்ணிக்கையில் செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளுக்கு பிரபலமானது. அதன் பவளப் பாறைகள் மற்றும் நீண்ட நெடிய கடற்கரைகள் காரணமாக மிகப்பெரிய உயிரியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. 9-வது இடத்திலுள்ள இதன் மதிப்பெண் 6.39.

கொலம்பியா

இந்த தென் அமெரிக்க நாடு அழகிய கடற் கரைப் பகுதியைக் கொண்டிருப்பதோடு வெப்பமண்டல காடுகள், ஆண்டியன் மலைகள், அமேசான் காடுகள் என இயற்கையின் அருங் கொடையை அழியாமல் பாதுகாத்து வருகிறது. அதனால் 7.16 மதிப்பெண்களுடன் கொலம்பியா 3-வது இடத்தில் உள்ளது.

தான்சானியா

சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கங்கள், எருமைகள் போன்ற வனவிலங்குகள் சுதந்திரமாக உலவும் பரந்த சமவெளி பிரதேசங்களை கொண்ட நாடாக தான்சானியா விளங்குகிறது. ஆப்பிரிக்காவின் அழகான நாடுகளின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்துள்ளது.

இங்குள்ள கிளிமஞ்சாரோ தேசிய பூங்காவில்தான் ஆப் பிரிக்காவின் மிக உயரமான மலை உள்ளது. உலகின் அழகான நிலப்பரப்பு கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடம் பிடித்திருக்கும் தான் சானியாவின் மதிப்பெண் 6.98.

மெக்சிகோ

மலைகள் முதல் கடற்கரைகள், காடுகள், பாலைவனங்கள், சதுப்பு நிலங்கள், குகைகள் வரை பல்வேறு வகையான நிலப்பரப்புகள் மெக்சிகோவுக்கு தனி அழகு சேர்க்கின்றன. எனவே 6.96 மதிப்பெண்களுடன் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

கென்யா

தான்சானியாவைப் போலவே, கென்யாவும் நம்பமுடியாத அளவுக்கு வனவிலங்குகள் சுதந்திரமாக உலவும் அழகிய வன பிரதேசத்தை கொண்டுள்ளது. அழகிய கடற் கரைப் பகுதிகளும் இந்த நாட்டுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. அதன் காரணமாக 6.70 மதிப்பெண் களுடன் 6-வது இடத்தில் உள்ளது.

இந்தியா

ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. பரந்து விரிந்த நிலப்பரப்புகள், இமயமலை சிகரங்கள், நீண்ட காடுகள், அழகான ஏரிகள் மற்றும் தார் பாலைவனம் போன்ற வறண்ட பகுதிகள் போன்ற அனைத்து வகையான இயற்கை அதிசயங்களை கொண்டுள்ள இந்தியா 6.54 மதிப்பெண்களுடன் 7-வது இடத்தில் உள்ளது.

பிரான்ஸ்

இயற்கை அழகு தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஐரோப்பிய நாடு பிரான்ஸ். ஓக், ஆலிவ் மரங்கள் நிறைந்த எண்ணற்ற காடுகள், இயற்கை குகைகள் மற்றும் பனி மூடிய சிகரங்கள் கொண்ட நம்பமுடியாத மலைகள், மணல் மற்றும் பாறை கடற்கரைகளுடன் மாறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது. 6.51 மதிப்பெண்களுடன் 8-வது இடம் பிரான்சுக்கு கிடைத்துள்ளது.


Next Story